தினசரி நடப்பு நிகழ்வுகள் January 7, 2025
“நாரி சக்தி வந்தனா ஆதிநியம்”:
- நாரி சக்தி வந்தன் சட்டமானது பெண் தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் முற்போக்கான பார்வைக்கு ஒரு சான்றாகும்.
- இது சட்டமியற்றும் நடவடிக்கை, பெண்களின் வலிமை மற்றும் திறனை அங்கீகரித்து அதிகாரம் அளிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
- மக்களவைச் செயலகத்தின் ஜனநாயகத்திற்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் பழங்குடி விவகார அமைச்சகத்துடன் இணைந்து ‘பஞ்சாயத்து சே பார்லிமென்ட் 2.0’ எனும் நிகழ்ச்சியை நடத்தியது.
- 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பழங்குடி பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த நிகழ்வை மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்.
- இந்தியாவின் ஜனநாயக மற்றும் மேம்பாட்டுப் பயணத்தில் பெண்கள் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அளித்துள்ளனா்.
- அரசியலமைப்பு சபையின் 15 பெண் உறுப்பினா்களின் பங்களிப்புகள் இந்தியாவில் பெண்கள் அதிகாரமளிப்பு இயக்கத்திற்கு தொடா்ந்து ஊக்கமளித்து வருகின்றன.
ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒத்திவைப்பு:
- ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஜனவரி 9 – ஆம் தேதிக்கு இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது.
- சா்வதேச விண்வெளி மையத்தை போல, இந்தியாவும் தனி விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
- அதுபோல, விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம், நிலவில் இருந்து ஆய்வுமாதிரிகளை கொண்டுவருதல், இந்திய விண்வெளி மையம் அமைப்பது போன்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களை இஸ்ரோ வகுத்துள்ளது.
- 2035 – ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி மையத்தை அமைக்கும் திட்டமுள்ளது.
- இதற்காக விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை ஒருங்கிணைப்பதற்கு முன்னோட்டமாக, 2024 டிசம்பர் 30 – ஆம் தேதி சேஸா் (எஸ்.டி.எக்ஸ்.01), டார்கெட் (எஸ்.டி,எக்ஸ்.02) ஆகிய இரு விண்கலங்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
- இத்துடன் 24 ஆய்வுக் கருவிகளும் அனுப்பப்பட்டன.
- தலா 220 கிலோ எடை கொண்ட இரு ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பூமியில் இருந்து 475 கி.மீ. சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்:
- 2019 – 21ஆண்டுக்கான 5 -ஆம் கட்ட தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, தேசிய சராசரியான 14.96 சதவீதத்தைவிட மிகக் குறைவு, எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இறுதி முயற்சியாக ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை’தமிழக அரசு தொடங்கவுள்ளது.
- மருத்துவம், வீட்டுவசதி மற்றும் கல்வி வாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் முதல்கட்டமாக 5 லட்சம் மிகவும் வறிய குடும்பங்களை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
- ஆதரவற்ற தனிநபா்கள், முதியவா்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறன் கொண்டவா்கள், மன வளா்ச்சிக் குறைபாடு கொண்டவா்கள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மகளிர் உரிமைத் திட்டம்:
- கலைஞா் மகளிர் உரிமைத் திட்டம் மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.
- 1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1,000 -ஐ தமிழக அரசு வழங்கி வருகிறது.
- அதன் மூலம் பயன்பெறும் குடும்பங்களின் வறுமையை இத் திட்டம் குறைத்துள்ளது.
- அதோடு, பெண்களுக்கு உரிய உரிமையும் அதிகாரமும் கிடைத்ததன் மூலம் குடும்பங்களில் பெண்களின் நிலையையும் உயா்த்தியுள்ளது.
- பெண்களுக்குக் கட்டணமின்றி பயணிக்க வகை செய்யும் ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.
தகவல் துளிகள்:
- தில்லியில் நமோ பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ரயில்வேயில் பல்வேறு புதுமைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் முதல் கதி சக்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
- மிக உயரமான ரயில்வே மேம்பாலம் சீனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, இது ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
- கடந்த 2014 – ஆம் ஆண்டு நாட்டில் 5 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருந்தது, தற்போது மெட்ரோ சேவைகள் 21 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- தற்போது நாடு முழுவதும் 50 வழித்தடங்களுக்கு மேல் மொத்தம் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
- அண்மையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தை எட்டி சாதனை படைத்தது.
- இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் விதத்தில் கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்க இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன்னுடைய கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை’வழங்கவுள்ளார்.
- இந்தோனேசியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.