தினசரி நடப்பு நிகழ்வுகள் December 23, 2024
இந்தியாவில் ஒட்டகப் பால் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் பயிலரங்கம்:
நாட்டில் பசு அல்லாத பால் துறையை ஊக்குவிக்கும் விதமாக ஒட்டகப் பால் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 2024 – ஆம் ஆண்டை சா்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது.
இதை முன்னிட்டு மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு – வேளாண் அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து சமீபத்தில் ஒட்டங்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்தில் (பிகானிா்) ‘இந்தியாவில் ஒட்டகப் பால் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல்’ குறித்த ஒரு வார பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
ஒட்டகங்கள் மிகுந்த மாநிலங்கள் – ராஜஸ்தான், குஜராத் ஆகும்.
இந்தியா-குவைத் இடையே 4 ஒப்பந்தங்கள்:
இந்தியா, குவைத் இடையே பாதுகாப்பு, கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டின் மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல்-ஷபா இடையே பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
கடந்த 1981-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்திக்கு பிறகு அரசுமுறை பயணமான பிரதமா் மோடி வருகை தந்தார்.
பாதுகாப்புத் துறையில் பயிற்சி, பணியாளா்கள்-வல்லுநா்கள் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி-மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கு மேற்கண்ட ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக பிற ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கத்தாா், குவைத் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்சி மாநாட்டை நடத்தியது குவைத்.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் 6 – ஆவது பெரிய நாடாக உள்ளது.
பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது:
பிரதமா் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் முபாரக் அல்-கபீா்’ விருது வழங்கப்பட்டது.
பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்ட 20 – ஆவது சா்வதேச விருது இதுவாகும்.
கடந்த நவம்பரில் நைஜீரியா, கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள் பிரதமருக்கு வழங்கப்பட்டன.
இருதரப்பு உறவுகள் மற்றும் உலக சமூகத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிப்பதாக குறிப்பிட்டு, இவ்விருதுகள் அளிக்கப்பட்டன.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள்: இஸ்ரோ
ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அவற்றில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட்டவை என்றும் 10 கருவிகள் கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டார்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த விண்கலன்கள் புவியில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
அதன் பின்னா் ஒன்றோடு ஒன்று அவை ஒருங்கிணைக்கப்படும்.
இந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்திலிருந்து மற்றொன்றுக்கு அவா்கள் மாறுவதற்கும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படும்.
டிசம்பர் 23: கிசான் திவாஸ் (தேசிய விவசாயிகள் தினம்)
ஐ.சி.ஏ.ஆர் கிசான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் தேசிய விவசாயிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 ஆம் தேதி இந்தியாவின் 5 வது பிரதமர் ஸ்ரீ சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
அகில இந்திய அளவில் 2023- 2024-ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் கோவை 34-ஆவது இடத்தை பிடித்துள்ளது, புதுதில்லி முதலிடமும், சென்னை 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
குவைத் நாட்டின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்” விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.
தென் கொரியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் அமெரிக்க விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு-19) மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை, வீழ்த்தி இந்தியா அறிமுக சாம்பியன் ஆனது.