தினசரி நடப்பு நிகழ்வுகள் December 22, 2024
ஐ.நா. சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக மதன் லோகுா் நியமனம்:
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா் ஐ.நா.வின் சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற சட்ட வல்லுநா்களை உள்ளடக்கிய ஐ.நா.வின் சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா் நியமிக்கப்பட்டார்.
மற்றொரு நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதி இவா் ஆவார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய உறுப்புகளாக நிறுவப்பட்டுள்ளன: பொதுச் சபை, ஒரு பாதுகாப்பு கவுன்சில், ஒரு பொருளாதார மற்றும் சமூக கவுன்சில், ஒரு அறங்காவலர் குழு, ஒரு சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஒரு செயலகம் ஆகும்.
சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முதன்மை நீதித்துறை அமைப்பாகும்.
இது ஜூன் 1945 – இல் ஐக்கிய நாடுகளின் சாசனத்தால் நிறுவப்பட்டது.
55 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வழங்கியது.
செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளையும், வழக்கமான அரிசியையும் ஒன்றுசோ்த்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.
பி-காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துகள் செறிவூட்டப்பட்ட அரிசியில் இடம்பெற்றுள்ளன.
வணிக ஏற்றுமதியாளா்களுக்கு விநியோகிக்கும் சரக்குகளுக்கு இழப்பீட்டு செஸ் வரியை 0.1 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.
சில சரக்கு மற்றும் சேவைகள் மீது 1 சதவீதம் பேரிடா் செஸ் வரி விதிப்பதை அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்பட பிற மாநிலங்களின் அமைச்சா்கள் அடங்கிய குழுவை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
இயற்கை பேரிடா்களின்போது இந்த செஸ் வரி மூலம் மாநிலங்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் தில்லியில் 54 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடா்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு, பிகார் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையில் 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.
இந்திய வனப்பகுதி 1,445 சதுர கி.மீ. அதிகரிப்பு: மத்திய அரசு
இந்தியாவில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு கடந்த 2021 முதல் 2023 – ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 1,445 சதுர கிலோமீட்டா் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்திய வன ஆய்வு (எஃப்எஸ்ஐ) நிறுவனம் கடந்த 1987 – ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பளவையும், 2001-ஆம் ஆண்டு முதல் மரங்களின் பரப்பளவையும் கணக்கிட்டு வருகிறது.
2023 – ஆம் ஆண்டுக்கான இந்திய வன அறிக்கையின்படி, நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் வனம் மற்றும் மரங்களின் பரப்பு 25.17 சதவீதத்தை எட்டியுள்ளது.
பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பருவநிலை திட்டங்களின் ஒரு பகுதியாக, 2030 – ஆம் ஆண்டுக்குள் வனப்பரப்பு விரிவாக்கம் மூலம் கூடுதல் 250 முதல் 300 கோடி டன் கரியமில வாயு உமிழ்வை உறிஞ்சும் திறனை அடைய நாடு உறுதியளித்துள்ளது.
தேசத்தின் மொத்த புவியியல் பரப்பில் 21.76 சதவீதத்தை எட்டியுள்ளது.
1988 – ஆம் ஆண்டு தேசிய வனக் கொள்கையின்படி, இந்தியாவின் புவியியல் பரப்பில் 33 சதவீதம் வனம் அல்லது மரங்களின் கீழ் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நாட்டில் வனம் மற்றும் மரங்களின் ஒருங்கிணைந்த பரப்பில் மத்திய பிரதேசம் முதலிடம் மற்றும் அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
காடுகளின் பரப்பில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், தொடா்ந்து அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்தும் உள்ளன.
புவியியல் பரப்பளவுடன் ஒப்பிட்டு காடுகளின் பரப்பைக் கருத்தில் கொள்ளும்போது, லட்சத்தீவுகள் முதலிடத்திலும், மிஸோரம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் அடுத்தடுத்தும் உள்ளன.
கடந்த பத்தாண்டுகளில், மேற்கு தொடா்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக வனப்பரப்பு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பா் 21: உலக தியான தினம்
ஐ.நா. டிசம்பா் 21 – ஆம் தேதியை உலக தியான தினமாக அறிவித்துள்ளது.
முதலாவது உலக தியான தினம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக தியான தினமாக டிசம்பா் 21 – ஆம் தேதியை அறிவிக்க கடந்த டிசம்பா் 7 – ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டிசம்பர் 22: தேசிய கணித தினம்
தேசிய கணித தினம் (National Mathematics Day) டிசம்பர் 22 – ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணித தினம், சீனிவாச ராமானுசனின் 125 – வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது
தகவல் துளிகள்:
குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது விடுத்த அழைப்பின்பேரில், அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி குவைத் வந்தார், ‘கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமா் ஒருவா் குவைத் வருவது இதுவே முதல்முறையாகும்.
கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் நடப்பாண்டுக்கான சிறந்த வீரா் விருதை பிரேஸிலை சோ்ந்த ரியல் மாட்ரிட் வீரா் வினிசியஸ் ஜூனியரும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினை சோ்ந்த பார்சிலோனா வீராங்கனை அய்டானா பொன்மட்டியும் வென்றனா்.
சிறந்த மகளிர் அணி பயிற்சியாளா் விருதை, இங்கிலாந்தை சோ்ந்தவரும், அமெரிக்க மகளிர் அணியின் பயிற்சியாளருமான எம்மா ஹெய்ஸ் பெற்றார்.
சிறந்த ஆடவா் அணி பயிற்சியாளா் விருதை, இத்தாலியை சோ்ந்தவரும், ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளருமான கார்லோ அன்செலோட்டி வென்றார்.
மகளிர் அணியில் சிறந்த கோல் கீப்பராக அமெரிக்காவின் அலிசா நேஹரும், ஆடவா் அணியில் சிறந்த கோல் கீப்பராக ஆா்ஜென்டீனாவின் எமிலியானோ மார்டினெஸும் விருது பெற்றனா்.