அமெரிக்கா: இந்திய தின அணிவகுப்பு:
- அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் நடைபெறவுள்ள இந்திய தின அணிவகுப்பில் அயோத்தி ராமா் கோயில் அலங்கார ஊா்தி இடம்பெறும் என இந்திய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்தது.
- இந்தியாவின் சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் 42-ஆவது இந்திய தின விழா ஆகஸ்ட் 18-ஆம் தேதி நியூயார்க்கின் பிரபலமான மேடிசன் வீதியில் நடைபெறவுள்ளது.
- இந்திய நடிகா் பங்கஜ் திரிபாதி கௌரவ விருந்தினராக கலந்துகொள்வார்.
- இந்த ஆண்டு அணிவகுப்பில், அயோத்தி ராமா் கோயிலின் 18-அடி நீளம், 9-அடி அகலம் மற்றும் 8-அடி உயரம் கொண்ட மாதிரி அலங்கார ஊா்தி இடம்பெறவுள்ளது.
- இது கலாசார முக்கியத்துவத்தின் சக்திவாய்ந்த சின்னமாகவும், இந்திய சமூகத்தின் வரலாற்று சான்றாகவும் இருக்கும்’ என எஃப்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு:
- பிரதமர் மோடி ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வந்தடைந்தார், கடந்த 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா வந்திருப்பது இதுவே முதல்முறை.
- பிரதமர் மோடியும், ஆஸ்திரிய தலைவர் கார்ல் நெஹாம்மரும் இருநாட்டு நிறுவனங்களும், உள்கட்டமைப்பு, மறுஆக்கம் செய்யக்கூடிய எரிசக்தி, பசுமைப் பரப்பு, புதிய தொழில்நுட்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் கூட்டாண்மையை மேற்கொள்ளும் திறன் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
- இருநாடுகளுக்கு இடையே புத்தாக்க தொழில்களுக்கான இணைப்பு நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்தது.
வேலூா் சிப்பாய் கலகம்:
- ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, வேலூா் சிப்பாய் கலகம் 1806 ஜூலை 10-ஆம் தேதி தொடங்கியது.
- வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தனர்.
- பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் ‘கிருதா’வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார்.
- சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது.
- அதனால் அங்கிருந்த துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர்.
- வேலூர் கலகம் அல்லது வேலூர் புரட்சி 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி நிகழ்ந்தது மற்றும் 1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முந்தைய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்திய சிப்பாய்களால் பெரிய அளவிலான மற்றும் வன்முறை கலகத்தின் முதல் நிகழ்வாகும்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்:
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவா் ஏ.எஸ்.குமாரி தலைமையில் நடைபெற்றது.
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் என்பது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், பெண்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சனைகளை விசாரிப்பதற்காகவும், மாநிலத்தின் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது.
- குடும்பம் மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்தவொரு துன்புறுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் இந்த ஆணையம் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தலைவர் மற்றும் அதிகபட்சம் 5 உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது.
- மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளை மாநிலத்தின் சமூக நலத்துறை உருவாக்குகிறது.
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக ஏ.எஸ்.குமாரி உள்ளார்.
- இவர் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடு மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதை ஆணையம் உறுதி செய்தல்
- மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறினால், அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல்.
‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்:
- ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டத்தை தருமபுரியில் ஜூலை 11 தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டம் நகா்ப் புறங்களில் செயல்படுத்தப்பட்டது.
- இத்திட்டம் தற்போது ஊரகப் பகுதியில் உள்ள மக்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது.
- இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
- தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு புதிய வளா்ச்சித் திட்டங்களை முதல்வா் அறிவிக்க உள்ளார்.
- மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்காக தற்போது இயங்கி வரும் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
சிவகிரி அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான கல் பலகைகள் கண்டெடுப்பு:
- தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள திருமலாபுரம் குலசேகரப்பேரி கண்மாயில் நடைபெற்று வரும் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான கல்பலகைகளும், பானையின் அடிப்பகுதியும் கிடைத்துள்ளன.
- இவை 2500 முதல் 3000 ஆண்டுகள் பழைமையானவை, அவற்றின் நீளம் 100 செ.மீ. முதல் 150 செ.மீ. வரையும் அகலம் 10 செ.மீ முதல் 15 செ.மீ வரையும் உள்ளது.
- 2021 – ஆம் ஆண்டு மண் எடுத்தபோது 4 அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் தென்பட்டன.
- தமிழக முதல்வா் காணொலி மூலம் அங்கு அகழாய்வுப் பணியை கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
- அகழாய்வு இயக்குநா் வசந்தகுமார்.
ஜூலை 11: உலக மக்கள் தொகை தினம்
- உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1987 -ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
- இந்த ஆண்டு 2024 உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள்: “தரவு சேகரிப்பில் முதலீடு செய்வது சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், தீர்வுகளைத் தையல் செய்வதற்கும், முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியம்”.
தகவல் துளிகள்:
- குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆர்பிசி) பிரிவு 125-இன் கீழ், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்ச தொகை கோரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- மான்யா மது காஷ்யப் என்பவர் பீகார் மாநிலத்தின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
- ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேட்மிண்டன் விளையாடினார்.
- உதகை படகு இல்ல நீரை சுத்திகரிப்பது குறித்து விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
- மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ப.ஜோதிமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது, அதன்படி, 2,500 பக்கங்கள் அடங்கிய பரிந்துரைகளை அரசிடம் குழு வழங்கியுள்ளது.